Sunday, July 18, 2010

Tamil Authors ரா. கிருஷ்ணமூர்த்தி - கல்கி (1899 - 1951) ( Kalki Krishnamurthy )

முதல் பக்கம்» கட்டுரைகள் » தமிழ் தாயின் பிள்ளைகள்
Tamil Activist - Tamil Authors
ரா. கிருஷ்ணமூர்த்தி - கல்கி (1899 - 1951) (
Kalki Krishnamurthy
)
கூடல்.காம் - 8 December, 2003

தஞ்சை மாவட்டத்தில் தோன்றிய "கல்கி" தமிழ் இலக்கியத்தில் தமக்கெனத் தனி இடம் அமைத்துக் கொண்டவர். தமிழ்மொழியில் புதினத்துறைக்கு வித்திட்டவர் இவரேயெனலாம். நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர். திரு.வி.க. விடம் பயிற்சி பெற்றவர்; "கல்கி" இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சமூக, வரலாற்றுப் புதினங்களையும் கணக்கற்ற சிறு கதைகளையும், கற்போர் உள்ளத்தைக் கவர்கின்ற கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற புதினங்கள் இவர்தம் புகழை இறவாத் தன்மைத்தாக ஆக்குகின்றன.

கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927-ல் வெளியானது.

சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை "தரம் குறையுமா" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கல்கி எழுதிய புதினங்கள்:

கள்வனின் காதலி
தியாகபூமி
மகுடபதி
பார்த்திபன் கனவு
சிவகாமியின் சபதம்
அபலையின் கண்ணீர்
சோலைமலை இளவரசி
அலை ஓசை
பொன்னியின் செல்வன்
தேவகியின் கணவன்
மோகினித்தீவு
பொய்மான் கரடு
புன்னைவனத்துப் புலி
அமர தாரா

இராமலட்சுமணர்களையும் வானரங்களையும் இலங்கைக்கு வரும்படியாக விட்டுவிட்டு, அப்புறம் இராவணன் திண்டாடிய கதையை நாம் அறிந்திருக்கிறோம். இராவணனுக்குத் தலை பத்து இருந்ததேயொழிய, ஒரு தலைக்கு இருக்க வேண்டிய புத்திகூடக்கிடையாது என்பதற்கு இதைக் காட்டிலும் அத்தாட்சி வேண்டியதில்லை. பிற்காலத்திலே இலங்கையை ஜயித்த வெள்ளைக் காரர்களுக்கு இருந்த புத்தியில் அரைவாசியாவது அவனுக்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? மண்டபத்தில் ஒரு "காம்ப்" ஏற்படுத்தி இலங்கைக்குள் வருகிறவர்கள் எல்லாம் செய்திருப்பான். அம்மை குத்திக் கொண்டுதான் வர வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பான். அம்மை குத்திக் கொள்வதற்குப் பயந்து கொண்டே இராம லட்சுமணர்களும் வானரங்களும் திரும்பிப்போய் இருக்கமாட்டார்களா?
- " கல்கி"

* கட்டுரைகள்
* இலக்கியம்
* சமூகம் - அரசியல்
* பொருளாதாரம்
* பொதுவானவை
* தமிழ் தாயின் பிள்ளைகள்

No comments:

Post a Comment